இஸ்லாமாபாத், அல் - காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வாரங்கள் ஜாமின் வழங்கி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், 70, பாக்., தெஹ்ரீக் - இ- - இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
வழக்கு விசாரணைக்காக, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானை, சமீபத்தில் 'ரேஞ்சர்ஸ்' எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
பிரதமராக பதவி வகித்த போது, 2019ல் தனக்கு சொந்தமான அல் - காதிர் அறக்கட்டளைக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, 'ரியல் எஸ்டேட்' நிறுவனத்திடம் இருந்து பெற்ற புகாரில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், பாக்., முழுதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம், 'இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம்' என தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்க வேண்டும்' என, அவருக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், அல் - காதிர் அறக்கட்டளை வழக்கு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மியாங்குல் ஹசன் அவுரங்கசீப், நீதிபதி சமன் ரபத் இம்தியாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில், அவருக்கு இரண்டு வாரங்கள் ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.