சென்னை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதில், கருணாநிதி நுாற்றாண்டு விழா நடத்துவது குறித்து, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் விவாதிப்பர். இதற்கான அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, ஜூன் 5ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைக்கிறார்.
முன்பு, டில்லியில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் திறப்பு விழாவிற்கு, பா.ஜ., தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, கருணாநிதி பொதுவான தலைவர் என்பதால், ஜூன் 5 விழாவுக்கு, பா.ஜ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம்.
அதே சமயம், லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள், மாநில கட்சிகளின் தலைவர்களில் யார் யாரை அழைக்கலாம் என்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டும். இந்த விவாதங்கள் அனைத்தும், 20ம் தேதி நடைபெற உள்ள திட்டக் குழு கூட்டத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.