கேங்டாக், 'சிக்கிமில், பழங்குடி இன மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்சா ஆட்சி நடக்கிறது.
தேசிய அளவில் மிக குறைந்த மக்கள் தொகை உடைய மாநிலமாக சிக்கிம் அறியப்படுகிறது. இங்கு, ஏழு லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
எனவே, மக்கள் தொகையை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உடைய சிக்கிம் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, அரசு பணியாளர் நலத்துறை செயலர் ரின்ஸிங் சேவாங் பூட்டியா நேற்று வெளியிட்டார்.
இதன் விபரம்:
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழ் அல்லது அடையாள அட்டை வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இரண்டு குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
மூன்று குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும். 2023, ஜன., 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.