திருப்பூர்:'தினமலர்' சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால், திருப்பூரில், அபாயகரமான ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் உயிர்பலி விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே, மேம்பாலத்துக்கு கீழ், மெகா ரவுண்டானா உள்ளது. தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, காமராஜர் ரோடு ஆகிய மூன்று பிரதான ரோடுகள் ரவுண்டானா பகுதியில் சந்திக்கின்றன.
காமராஜர் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், இடதுபுறமாக ரவுண்டானாவை கடந்து பல்லடம் ரோட்டை அடைகின்றன. பல்லடம் ரோட்டில் வரும் வாகனங்கள், ரவுண்டானாவில் யூ - டர்ன் எடுத்து, கிழக்குப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டை அடைந்து, மீண்டும் பல்லடம் நோக்கி செல்கின்றன.
எதிரே வரும் வாகனங்கள், நடந்து செல்வோர் தெரியாதவகையில், ரவுண்டானா அமைந்துள்ளதாலும், வாகனங்களின் கட்டுப்பாடு இல்லாத அசுர வேகத்தாலும், ரவுண்டானா, விபத்து அபாய பகுதியாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, போலீஸ், மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில், கடந்த 1ம் தேதி வெளியான 'தினமலர்' நாளிதழில், 'ரவுண்டானா பகுதியில் விபத்து அபாயம்' என்கிற தலைப்பில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், அதிகாரிகளின் கண்டுகொள்ளாததால், அதே ரவுண்டானா பகுதியில், நேற்றுமுன்தினம் (11 ம் தேதி), ரோட்டை கடந்த ஒருவர், விபத்தில் சிக்கி பலியானது பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், ரவுண்டானாவிலிருந்து திரும்பி பல்லடம் ரோட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் செல்வதற்காக, ரவுண்டானாவில் யூடர்ன் எடுத்து, கிழக்கு சர்வீஸ் ரோட்டை நோக்கி வேகமாக திரும்பிய தனியார் கல்லுாரி பஸ் (குமரகுரு கல்லுாரி), நடந்து சென்றவர் மீது மோதியது. இந்த விபத்தில், பஸ்சில் சிக்கி, படுகாயமடைந்தவர், அதேயிடத்திலேயே பலியானார். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராவில், இந்த சோகமான விபத்து காட்சி பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து, அதிகாரிகள் இனியேனும், ரவுண்டானா பகுதியில் உரிய விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.