கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மா விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, மா விவசாயிகள், தோட்டங்களை அழித்து வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு, 2.45 லட்சம் டன் மா உற்பத்தி இருந்தது.
பத்து ஆண்டுகள் முன் வரை இந்தியாவிலேயே, தமிழகம் தான் மா உற்பத்தியில் முதலிடத்தை பெற்று இருந்தது. ஆனால், இன்று மா உற்பத்தியில் தமிழகம், ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'பருவநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
'விளைச்சல் குறைந்தால் மாங்காய் விலை உயரும். ஆனால் மாங்கூழ் நிறுவனங்கள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து மிக குறைந்த விலையை கொடுக்கின்றனர்' என்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த விருப்பம்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் கூறுகையில், ''25 ஆண்டுகளாக மா மரங்களை பராமரித்தும், பூச்சி தொல்லையால் மகசூல் இல்லை. உற்பத்தியாகும் மாங்காய்களுக்கு குறைந்த விலை நிர்ணயிப்பதால் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை.
''இதையடுத்து எனக்கு சொந்தமான, 15 ஏக்கர் மாந்தோட்டத்தில் இருந்த, 1,350 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன்,'' என்றார்.
கே.ஆர்.பி., இடதுபுற கால்வாய் நீட்டிப்பு சங்க தலைவர் சிவகுரு கூறுகையில், ''அரசே மாங்கூழ் தொழிற்சாலையை, கிருஷ்ணகிரியில் அமைக்க வேண்டும். விவசாயிகளை அதில், பங்குதாரர்களாக சேர்க்கலாம்.
''அரசே மாங்கூழ் தொழிற்சாலையை நடத்தினால், ஆயிரக்கணக்கான கோடி லாபத்துடன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்,'' என்றார்.