கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பெரிய ஏரி மீன் வளர்ப்பு குத்தகையை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சிலர் பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.
சின்னசேலத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்களை வளர்த்து விற்பனை செய்வதற்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பிச்சன் என்பவர் ரூ. 60 ஆயிரத்து 360 செலுத்தி ஏரியை குத்தைக்காக எடுத்துள்ளார்.
இந்நிலையில், முறையான அறிவிப்பின்றி மறைமுகமாக ஏலம் விடப்பட்டிருப்பதாக கூறி, சின்னசேலத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு உதவி பொறியாளர் பிரபுவை சந்தித்து, சின்னசேலம் பெரிய ஏரி ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் விட வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கையை மனுவாக எழுதி உதவி பொறியாளரிடம் அளித்தனர்.