புதுச்சேரி : முருங்கப்பாக்கம் ஆற்றை துார்வார வேண்டும் என அரியாங்குப்பம் பா.ஜ.,தொகுதி தலைவர் செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரசின் மீனவர் நலத்துறை, கடலில் மீன் பிடிப்பவர்களை மட்டுமே மீனவர்களாக கருதி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆறு, ஏரிகளில் மீன் பிடித்து வாழ்பவர்களும் உள்ளனர்.
இந்த உள்நாட்டு மீனவர்களுக்கான வாழ்வாதாரம் ஆறு, ஏரிகள்தான்.ஆனால், புதுச்சேரியில் பெரும்பாலான ஆறு, ஏரிகளில் மழைநீர் தேக்கி வைக்கப்படுவதற்கு மாறாக, கழிவுநீர்களே தேக்கி வைக்கப்படுகின்றது. இதனால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் முருங்கப்பாக்கம் ஆறும் கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு, அப்பகுதியில் வாழும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாழடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் மண் துார்ந்து தண்ணீர் தங்காததால் உள்நாட்டு மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மீனவர் நலத்துறை உடனடியாக முருங்கப்பாக்கம் ஆற்றை தூர்வார வேண்டும். மேலும் அந்த ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்கச் செய்து, மழைநீரை மட்டுமே செல்லக்கூடிய ஆறாகவும் மாற்ற வேண்டும். இதுபோல் புதுச்சேரியில் பிற பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளையும் பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.