சென்னை,: சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் இடுப்பெலும்பை மாற்றுவதற்கான நேரடி முற்பக்க அணுகுமுறை சிகிச்சை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் இன்று நடக்கிறது.
இது குறித்து மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதீவ் மோகன்தாஸ் கூறியதாவது:
இடுப்பெலும்பை மாற்றுவதற்கான நேரடி முற்பக்க அணுகுமுறை என்பது ஒரு மாற்று அறுவை சிகிச்சை நுட்பமாகும்.
இதில் இடுப்பு மூட்டானது பாரம்பரிய முறையின்படி பக்கவாட்டு அல்லது பின்புறத்தில் இருந்து அணுகப்படாமல், உடலின் முன்பகுதியில் இருந்து அணுகப்படுகிறது. பாரம்பரிய மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போலல்லாமல், இந்த நிலை அறுவை சிகிச்சைக்கு பிறகு கால்களின் நீளம் சமமாக உள்ளதா என்பதை டாக்டர்கள் எளிதாக தீர்மானிக்க அனுமதிக்கிறது.
முன்னதாக, சில முற்பக்க இடுப்பு அறுவை சிகிச்சைகள் 'ஹன்னா டேபிள்' என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு டேபிளின் மீது செய்யப்பட்டன.
இந்த டேபிளில் நோயாளியை நிலைப்படுத்த நீண்ட நேரம் ஆகும். மேலும், இதன் விலையும் அதிகம். ஆனால் இப்போது, வந்துள்ள நேரடி முற்பக்க அணுகுமுறை சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மியாட் இன்டர்நேஷனல் இந்தியா மற்றும் ஆசியா--பசிபிக் பிராந்தியங்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி வரலாற்றை கொண்டுள்ளது.
இது இந்தியாவில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கணினி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் மருத்துவமனையாகும். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடுப்பு, முழங்கால் மற்றும் மேல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.
இடுப்பெலும்பை மாற்றுவதற்கான நேரடி முற்பக்க அணுகுமுறை சிகிச்சை குறித்த பயிலரங்க நிபுணர்களும், 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று, ஆழமான அறிவியல் அறிவை பகிர்ந்து கொள்கின்றனர்.
இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இஸ்ரேல் டாக்டர் நபில் கரேப் இடுப்பெலும்பை மாற்றுவதற்கான நேரடி முற்பக்க அணுகுமுறை சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.