கடலுார் : 'தமிழகத்தில் 4 ஆயிரம் அரசு பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அறிவித்த படி, கடலுார் அரசு போக்குவரத்துக் கழக பனிமனை யில், டிரைவர், கண்டக்டர்களுக்கான 'ஏசி' ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்து கழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்களுக்கான பணப்பலன்கள் 4 மாதத்திற்குள் வழங்கப்படும். போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஆணை வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தது. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாஸ் வழங்கப்படும்.
தமிழகத்தில் 400 தாழ்தள பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு, இறுதி வடிவம் பெற்றுள்ளது. மேலும், 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும்.
மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என, அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில், 15,000 பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன.
கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பஸ்கள் ஓடவில்லை. புதிய பஸ்கள் வாங்கும் வரையில், பழைய பஸ்களை இயக்க மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. கடலுார் போக்குவரத்து பணிமனையில் குளிர்சாதன தங்கும் அறை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 280 கோடி பெண்கள் இலவசமாக பஸ் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., செயலாளர் ராஜா, தொ.மு.ச. மண்டல தலைவர் தங்க ஆனந்தன், மாநகர அவைத்தலைவர் பழனி வேல், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன் உடனிருந்தனர்.