பெங்களூரு-''கஷ்ட காலத்தில் கட்சியை வழி நடத்தியுள்ளேன். எனவே சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தந்து, ஆதரவு தருவர். சிறந்த காங்கிரஸ் ஆட்சி தருவோம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முதல்வர் பதவிக்கு 'டவல்' போட்டுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஒரு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் என்பது குறித்து, அக்கட்சி தலைவர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள முக்கிய தலைவர்கள்.
இது குறித்து, பெங்களூரில் சிவகுமார் நேற்று கூறியதாவது:
மாநில தலைவர் பதவியை நிர்வகிக்க முடியாது என்று தினேஷ் குண்டுராவ், தாமாக முன் வந்து ராஜினாமா செய்தார். அப்போது, முன்னாள் தேசிய தலைவர் சோனியா, என்னை அடையாளம் பார்த்து தலைவர் பதவி தந்தார்.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த போது, அதற்கு முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக சித்தராமையா கூறினார்.
நான் பதவி ஏற்று கொண்ட நாள் முதல், துாங்காமல் கட்சிப்பணி ஆற்றி வருகிறேன். கட்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தும் செய்துள்ளேன். சிரமப்பட்டு உழைத்துள்ளேன்.
கஷ்ட காலத்தில் கட்சியை வழி நடத்தியுள்ளேன். எனவே சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தந்து, ஆதரவு தருவர். சிறந்த காங்கிரஸ் ஆட்சி தருவோம். காங்கிரசில் அதிகார பகிர்வு தொடர்பாக விவாதிக்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் எடுக்கும் முடிவே இறுதியானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு பெரும்பான்மை கிடைக்கும் என்றனர். தற்போது 20 தொகுதிகள் குறைத்து காட்டுகின்றனர். இம்முறை 141 தொகுதிகளில் வெற்றி உறுதி.
குமாரசாமி மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர்களின் கணக்கு நமக்கு எதற்கு. கர்நாடகாவில் சொகுசு விடுதி அரசியல் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது.
எத்தனை தொகுதிகளில் வென்றாலும் ஆட்சி அமைப்பதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.