இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் வழங்கிய தகவலின் படி, ஏப்ரலில் மியூச்சுவல் பண்ட் வழியாக வந்த தொகை ரூ.6,480 கோடியாக உள்ளது. மார்ச் மாதம் இது ரூ.20,190 கோடியாக இருந்தது. தற்போது 68% சரிந்துள்ளது. பங்குகள் சரிவைச் சந்தித்த போது அதிகம் பேர் முதலீடு செய்துள்ளனர் என்பதும், ஏற்றம் கண்டதும் முதலீட்டை நிறுத்தியுள்ளனர் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.
மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து பணத்தை பெறும். மக்கள் தேர்ந்தெடுத்துள்ள திட்டத்திற்கு ஏற்ப பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும். அந்தப் பங்குகள் விலை உயர உயர மியூச்சுவல் பண்ட் யூனிட்டின் விலையும் உயரும். இதனை நிர்வகிக்க பண்ட் மேனேஜர் ஒருவர் இருப்பார். மொத்தமாக முதலீடு செய்வதை விட மாதாந்திர முதலீட்டை நீண்ட காலம் தொடரும் போது மியூச்சுவல் பண்ட்கள் வங்கி வட்டியை விட கூடுதல் லாபம் தர வாய்ப்பு உண்டு. மியூச்சுவல் பண்ட்கள் செபியின் கண்காணிப்பின் கீழ் வருவதால் பணம் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
![]()
|
இந்நிலையில் தான் ஏப்ரல் மாதம் ஓப்பன்-எண்டட் ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் ரூ.6,480 கோடி வரவு வந்துள்ளது. இது மார்ச் மாதத்தை விட 68% குறைவு. மார்ச் மாதத்தில் புதிய பண்ட் ஆபர்களால் முதலீடு அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஓராண்டாக மியூச்சுவல் பண்ட் பெரிய லாபத்தை தரவில்லை. அதனால் ஏப்ரலில் பங்குகள் விலை உயர்ந்த போது லாபம் கிடைத்தவர்கள் பண்ட் யூனிட்களை விற்றதாக எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட்டின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி டிபி சிங் கூறினார். ஏப்ரலில் ரூ.17,500 கோடி ரூபாயை மக்கள் வெளியே எடுத்துள்ளனர்.
எஸ்.ஐ.பி., நிலைமை எப்படி?
![]()
|
மார்ச் மாதத்தில் 6 கோடியே 35 லட்சமாக இருந்த எஸ்.ஐ.பி., கணக்குகள், ஏப்ரல் மாதத்தில் 6 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளன. எஸ்.ஐ.பி., மூலம் இதுவரை நிர்வகிக்கப்படும் பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடி. இது மார்ச் மாதம் 6.8 லட்சம் கோடியாக இருந்தது.
ஏப்ரல் மாதம் எஸ்.ஐ.பி., மூலம் மக்கள் முதலீடு செய்துள்ள தொகை ரூ.13,727 கோடி. மார்ச் மாதம் இது ரூ.14,276 கோடியாக இருந்தது. ஏப்ரலில் சரிந்துள்ளது. இருப்பினும் 2022 ஏப்ரலை விட 2 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் ஏப்ரலில் வந்துள்ள பணம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். மார்ச் மாதம் ரூ.54,472 கோடியை இதே கடன் பண்ட்களில் இருந்து வெளியே சென்றுள்ளது. மிகக் குறுகிய கால பண்ட் மற்றும் லிக்விட் பண்ட்களில் அதிகரித்த முதலீடுகளால், 1 லட்சம் கோடி ரூபாய் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. மொத்தத்தில் ஏப்ரல் மாதம் ரூ.41.6 லட்சம் கோடி அளவிற்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.