பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் நிர்வாணமாக கிடந்ததால், அவரை கற்பழித்து கொலை செய்து உடலை வீசி சென்றனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி., காலனி அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 64. அவரது கணவர் சின்னுசாமி, பல ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். பழனியம்மாளின் ஒரே மகன் முனிராஜ் திருமணமாகி ஆனங்கூர் பகுதியில் வசித்து வருகிறார்.
பழனியம்மாள், அண்ணாநகரில் காட்டு கொட்டகை அமைத்து தனியாக வசித்து வருகிறார். மாடு, ஆடு, கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காட்டுகொட்டகை பகுதிக்கு, சற்று துாரத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு, நிர்வாணமான நிலையில் கிடந்தார். பள்ளிபாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். அவர் வசித்த காட்டு கொட்டகையில் சமையல் பாத்திரங்கள் சிதறி கிடந்ததால், கொலை செய்வதற்கு முன் கொலையாளிகளுக்கும், பழனியாம்மாளுக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்துள்ளதாக தெரிகிறது.
பழனியம்மாள் ஆடு, மாடு வளர்த்து வந்ததால், அவரிடம் எப்போதும் பணம் இருக்கும். இதனால் பணத்துக்கு ஆசைப்பட்ட, மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பணத்தை எடுத்துசென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பழனியம்மாள் நிர்வாணமாக கிடந்ததால், அவரை கற்பழித்து கொலை செய்து, உடலை வீசி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 19ல் ஓடப்பள்ளி வண்ணாம்பாளையம் பகுதியில் கரும்பு காட்டுக்குள் பாவாயி, 70, என்ற மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்தார். இது வரை இந்த வழக்கில் எந்த தடயமும் கிடைக்காததால், இரண்டு மாதமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனியாக வசித்து வந்த பழனியம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். இரண்டு சம்பவமும் ஒரே மாதிரியாக உள்ளதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.