திருப்பூர்:கிராம பஞ்சாயத்துக்களிலும் இனி, 'ஆன்லைன்' வாயிலாக கட்டட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டடம் கட்டும் முன், ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டட வரைபட அனுமதி பெறுவது அவசியம். இதுவரை நேரில் ஆவணங்களுடன் விண்ணப்பித்து, காசோலை வாயிலாக கட்டணம் செலுத்தி, வரைபட அனுமதி பெறப்பட்டது.
பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில், நகராட்சி, பேரூராட்சிகளில் இருப்பதை போல, இனி ஊராட்சிகளிலும், 'ஆன்லைன்' வாயிலாக கட்டட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறை இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
கட்டட வரைபட அனுமதி வழங்குவது, ஊராட்சியின் முக்கிய நிதி ஆதாரம். இனி ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி ஆணையும், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய அறிவிப்பு தொடர்பாக, ஊராட்சி களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். அதுவரை, புதிய கட்டட உரிமம் கேட்டு ஆவணங்களுடன் நேரடியாக விண்ணப்பம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.