மதுரையில் நுாற்றாண்டை கடந்து, 'ஆர்.எஸ்.பதி நேட்ச்ரோ' என்ற பெயரில் செயல்படும், தைலம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேக் சபாபதி:
எங்களின் தைலம் தயாரிப்பு நிறுவனத்தை, தொழில் நிறுவனம் என்று சொல்வதை விட, 124 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நிறுவனம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
என் கொள்ளுத் தாத்தா தொழில் துவங்கிய போது, மூலப்பொருட்களை கேரளா, கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து வாங்கினார்.
மூலப் பொருட்கள் கிடைத்ததும், வீட்டில் கையால் மருந்து தயாரித்து, அவரே சென்று விற்றுள்ளார். சிறிய அளவில் தொழில் துவங்கிய போதும், அதை ஒரு பிராண்டாக உருவாக்க வேண்டும் என்பது, அவரின் எண்ணமாக இருந்துள்ளது.
அதனால், பிராண்டின் பெயர், 'லோகோ' என, எல்லாவற்றையும் டிசைன் செய்து, 'லைசென்ஸ்' வாங்கி, தொழிலை முறையாகவே செய்துள்ளார்.
அவர் இறந்தபின், கொள்ளுப்பாட்டி நாகரத்தினம்மாள் தொழிலை கவனிக்கத் துவங்கினார். அந்தக் காலத்தில், பெண்கள் தொழிலை தலைமை ஏற்று நடத்துவது அபூர்வமான விஷயம் என்றாலும், தன் கணவரின் லட்சியத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரே தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
அதன்பின், தாத்தா மற்றும் அப்பா காலத்தில், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களுக்கும், தைலங்களை அனுப்பத் துவங்கினோம்.
ஒரு பிராண்டை அடுத்தடுத்த இடத்துக்கு கொண்டு செல்ல, புதுப்புது முயற்சிகள் எடுத்தபடியே இருக்க வேண்டும் என்பதை, அப்பாவிடம் இருந்து கற்றேன்.
சிறு வயதில் இருந்தே தொழில் சார்ந்து இயங்குவதால், மார்க்கெட்டிங், சேல்ஸ், மருந்துகள் தயாரிப்பு பற்றி தொழிலுக்குள் வரும் முன்பே கற்றுக் கொண்டேன்.
காலத்திற்கு ஏற்றார் போல, சமூக வலைதளங்களை பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யத் துவங்கினேன்.
பாரம்பரியம் மாறாமல், தாத்தாவின் வைத்தியக் குறிப்புகளின் உதவியுடன், சோப்பு, டீ துாள், 'கப்' வடிவத்தில் இருக்கும் பிஸ்கட்கள், காபித்துாள், வாசனைத் திரவியங்கள் உட்பட, 17 வகையான பொருட்களையும் அறிமுகம் செய்தேன்.
'ரோல் ஆன் பாம்ஸ்' 5 ரூபாய் பாக்கெட்டுகள் என, நிறைய மாறுதல்கள் செய்தேன். 'ஆன் லைன்' தளங்கள் வாயிலாகவும், எங்களின் உற்பத்தி பொருட்களை, நாடு முழுதும் விற்கத் துவங்கினோம்.
எங்களின் தைலத் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளான, 'யூக்கலிப்டஸ்' இலையை கவனமுடன் தேர்வு செய்கிறோம்.
மற்ற மூலப்பொருட்களை கலப்பதிலும் கவனமாக இருப்பதால், தைலத்தின் தரத்தில் அன்று முதல் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; இனிவரும் காலத்திலும், பாரம்பரியம் மாறாமல் வளர்வோம்.
எதிர்கொள்ளும் விதத்தில் தான்வெற்றி கிட்டும்!
நம் நாட்டில், ௧௭ மாநிலங்களில், '108' ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின், முதல் பெண் டிரைவரான, தேனி மாவட்டம் போடிநாயக்கனுாரைச் சேர்ந்த வீரலட்சுமி:எனக்கு திருமணமானதும், கணவருடன் சென்னையில் குடியேறினோம். கணவர் கார் டிரைவர். எனக்கு சிறுவயது முதலே, 'சுயமாக சம்பாதிக்க வேண்டும்; குடும்பத்துக்கு நாமும் உதவியாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் இருந்தது.
சென்னையில் செயல்படும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு தன்னம்பிக்கை தரவும், நர்சிங் உட்பட பல பயிற்சிகள் கொடுப்பது பற்றி அறிந்தேன்.அங்கு சேர்ந்து டிரைவிங் கற்றுக் கொண்டேன். அவர்கள் ஏற்பாட்டில், 'பேட்டரி' கார் ஓட்டினேன். அந்த வருமானம் போதுமானதாக இல்லாததால், 'கால் டாக்சி' ஓட்டத் துவங்கினேன்.
இதன்பின், ஒரு டிராவல்சில் சேர்ந்து பணியாற்றிய போது, 'ஹெவி டிரைவிங் லைசென்ஸ்' எடுத்தேன். அந்த கம்பெனியிலேயே, கிண்டியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, 'ரெகுலர் ட்ரிப்'பாக பஸ் ஓட்டினேன்.கொரோனா சமயத்தில் சொந்த ஊரான போடிக்கு வந்த போது, 108 ஆம்புலன்சுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. தேனி மெடிக்கல் காலேஜுக்கு இன்டர்வியூவுக்கு போனேன். மெடிக்கல் டெக்னீஷியன் வேலைக்கு வந்திருப்பதாக எல்லாரும் நினைத்தனர். ஆனால், 'எமர்ஜென்சி பைலட் வேலைக்கு வந்திருக்கேன்' என்று சொன்னதும், அங்குள்ளோர் அப்படியே, 'ஷாக்' ஆகினர். பாதி நம்பிக்கையில் தான், வண்டியை ஓட்டிக் காட்டும்படி கூறினர்; அதில், அவர்களுக்கு திருப்தி.
ஆட்டோமொபைல் படித்திருப்பதால், டெக்னிக்கலாவும், பிராக்டிக்கலாவும் வண்டி சம்பந்தமான விஷயங்கள் எனக்கு அத்துப்படி. அவர்கள் வைத்த தேர்விலும், 'பாஸ்' ஆகிவிட்டதால், வேலை கிடைத்தது.சென்னை ஆவடிக்கு பக்கத்தில் பருத்திப்பட்டு ஏரியாவில் தான், முதல், 'ட்யூட்டி' போட்டனர். கொரோனா சமயத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு மிகவும் கிரிட்டிக்கலான நிலை; அந்தப் பெண்ணுடன் வந்தோர், மிகவும் பயந்து விட்டனர். வேகமாக ஆம்புலன்சை ஓட்டி வந்து, அவர்களை பத்திரமாக மருத்துவமனையில், 'அட்மிட்' செய்தேன்.
நல்லபடியாக அந்தப் பெண்ணுக்கு பிரசவமானது. 'நீ ரெண்டு உசுரக் காப்பாத்திட்டம்மா'ன்னு சொல்லி, அவங்ககூட வந்த பெரியவங்க உச்சி முகர்ந்து பாராட்டினர். நெகிழ்ச்சியான அந்த சம்பவம், இப்பவும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு!சிரமம் என நினைத்தால், எல்லாமே சிரமம் தான். பயந்து ஒதுங்கினால், வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது. களத்தில் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்ற விதத்தில் தான் வெற்றி இருக்கு!