வேலுார்:'ஹெல்மெட்' அணிந்து, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், 1,000 ரூபாய் அபராதம் விதித்ததை தட்டிக்கேட்ட கல்லுாரி மாணவரை, போலீசார் கன்னத்தில் அறைந்து பல்லை உடைத்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே குப்பத்தாமோட்டூரைச் சேர்ந்தவர் தினேஷ், 22; வேலுார் தந்தை பெரியார் அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவரது நண்பர் சூர்யாவுடன், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் கலெக்டர் அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி போக்குவரத்து போலீசார், தினேஷ் பைக்கை நிறுத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து போலீசாரிடம், 'எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன; ஹெல்மெட்டும் அணிந்துள்ளோம். ஏன் அபராதம் விதித்தீர்கள்?' என, இருவரும் கேட்டனர்.
ஆத்திரமடைந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், திடீரென தினேஷை கன்னத்தில் அறைந்ததில், அவரது பல் உடைந்தது.
பின்னர், தினேஷ், சூர்யா சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து தினேஷ் தந்தை மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலுார் டி.எஸ்.பி., திருநாவுக்கரசு, வேலுார் வடக்கு போலீசார் அவர்களிடம் பேசி, சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.