ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், கோவைப்புதுார், வடவள்ளி என கோவை நகரில், மரங்கள் நிறைந்த பகுதிகளுக்கென்று, தனியொரு மதிப்பும், ஈர்ப்பும் இருக்கிறது.
அதிலும், குளிர் காலத்தில் இலைகள் விழுந்து, வெறும் நரம்புகளோடு மிரட்டும் இந்த மரங்கள், வெயில் வருவதற்கு முன்பே துளிர்த்து, கோடையின் உச்சத்தில் குளுகுளுவென்று காற்றும், நிழலும் தருவது, கண் முன்னே நிகழும் இயற்கையின் அதிசயம். அகன்று விரிந்த சாலையின் இரு புறமும், அடர்ந்து படர்ந்து நிற்கும் இந்த மரங்கள் தான், அந்தந்தப் பகுதிக்கு அழகைக் கொடுக்கின்றன.
சொத்து மதிப்பையும் குத்து மதிப்பாய் உயர்த்தி விடுகின்றன. ஆனால், தெருவுக்கே அழகு கொடுக்கும் இந்த மரங்கள் தான், அவ்வப்போது நபர்கள் மீதும், வாகனங்கள் மற்றும் மின் கம்பங்கள் மீதும் விழுந்து, பேராபத்தையும் விளைவித்து விடுகின்றன.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கோடை மழையில், கோவை நகரில் நுாற்றுக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளால், மரங்கள் வைப்பதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகி வருகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது மரங்கள் விழுவதற்கு பாதாள சாக்கடை, பைப் லைன் காஸ், ஸ்மார்ட் சிட்டி பணிகள் என பல காரணங்கள் உள்ளன. அதிமுக்கியக் காரணம், இவற்றில் பெரும்பாலானவை பலமில்லாத மரங்கள்.
தெருக்களில் எந்தெந்த மாதிரியான மரங்களை வளர்க்கலாம் என்பது பற்றி, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தின், முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
இப்போது விழும் மரங்கள் பெரும்பாலும், வெளிநாட்டு மரங்கள்தான். அவை விரைவாக வளர்ந்து, விரைவாக விழுந்து விடும். மே பிளவர், துாங்கு மூஞ்சி மரங்கள் பலமில்லாதவை. காற்று சற்று பலமாக அடித்தாலும் அதைத்தாங்காது. கிளைகள் எளிதில் உடையும்.
நம் மண்ணின் மரங்கள் மெதுவாக வளர்ந்தாலும், நுாறாண்டு தாண்டியும் பலத்துடன் நிற்கும். எனவே, அழகுக்காக மட்டுமே மரங்களை வளர்க்கக்கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நம் மண்ணின் மரமே நல்லது!
''தெருக்களில் நாவல், இலுப்பை, வாதாம், பூவரசு, கடம்பன், புங்கன், வேம்பு, புளியமரம் போன்றவற்றை வளர்க்கலாம். இவை எவ்வளவு காற்று, மழை அடித்தாலும் தாங்கும். கிளைகளும் எளிதில் உடையாது. இவற்றின் காற்றும், நிழலும் ஆரோக்கியம் தருபவை. ஆனால் வளர்வதற்கு நாளாகும். அதுவரை வளர்த்து எடுப்பது குடியிருப்பாளர்களின் கடமை. அழகுக்காக 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' (Butea monosperma) வைக்கலாம்; அது நம் மண்ணின் மரம்தான். வெளிநாட்டு மரங்களில், ஜெகரண்டா மரம் அழகும் தரும்; ஆபத்துமில்லை.
- கண்ணன் வாரியர்
முதன்மை விஞ்ஞானி, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மையம்