வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில், முதல்வர் பதவியை பிடிப்பதில், முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 'டில்லியில் மேலிட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின், முதல்வர் பெயர் அறிவிக்கப்படும்' என காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், யார் முதல்வர் ஆவது என்பது குறித்து, அக்கட்சி தலைவர்களிடையே, ஓராண்டாகவே கடும் போட்டா போட்டி நிலவியது.
குருபர் சமுதாயத்தைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த மாநில தலைவர் சிவகுமார், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த, காங்., தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் எம்.பி. பாட்டீல் ஆகியோர் முதல்வர் பதவிக்கு குறி வைத்து செயல்பட்டனர்.
நீயா, நானா?
தற்போது எதிர்பார்த்தபடி முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அரியணையில் அமர்கிறது. இதனால், கர்நாடக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் காங்கிரசுக்கு வாழ்த்துகள் சொல்வதால், மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
அதே நேரம், முடிவுகள் வெளியானதும் முதல்வர் பதவிக்கான சதுரங்க ஆட்டம் ஆரம்பித்து விட்டது. குறிப்பாக, சிவகுமார் - சித்தராமையா இடையே நீயா, நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.மற்றவர்களை பின்னுக்கு தள்ளி, இருவரில் ஒருவர் முதல்வராவது உறுதி என்றாலும், முதல்வர் பதவி கிடைக்காத மற்றொருவருக்கு முக்கிய பதவி வழங்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.
அந்த வகையில் இருவரின் பலம், பலவீனம் பற்றி பார்க்கும் போது, 2013 - 2018 வரை முதல்வராக இருந்த சித்தராமையா, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தார். சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் சமுதாயத்தின் ஆதரவு பெற்ற தலைவர் என்ற பெயர் உள்ளது. குருபர் சமுதாயத்தின் பெரிய தலைவராக விளங்குகிறார். அபரிமிதமான தொண்டர்கள் செல்வாக்கும் கொண்டவர்.தற்போது, 75 வயதாகும் சித்தராமையா, 'இது தான் என் கடைசி தேர்தல்' என்று கூறியிருந்தார். எனவே, இம்முறை மட்டும் தனக்கு முதல்வர் பதவியை தரும்படி அடம் பிடிக்கிறார். அவரது மகன் யதீந்திராவும் தன் தந்தைக்கு தான் முதல்வர் பதவி தர வேண்டும் என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதே நேரம், காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் போது எல்லாம், ஆபத்பாந்தவனாக நின்று காத்தவர் சிவகுமார். 2018 குஜராத்தில் நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலின் போது, பா.ஜ.,வின் ஆப்பரேஷன் தாமரையில் இருந்து, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு கர்நாடகாவில் அடைக்கலம் தந்தவர். இதற்காக, அவரது வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., சோதனைகள் நடத்தப்பட்டன. டில்லி திஹார் சிறை வாசமும் அனுபவித்தார். இன்னமும் அந்த வழக்குகள் நடந்து வருகின்றன. பெரும் செல்வந்தரான இவர், கட்சிக்காக தாராளமாக செலவுகளும் செய்துள்ளார். பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த பெங்களூரு காங்கிரஸ் அலுவலக கட்டடத்தை கட்டி முடித்தார்.சாதாரண தொண்டர் முதல், தலைவர் பதவி வரை உயர்ந்தவர். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக் கூடியவர் என்ற கருத்து உள்ளது.
இப்படி இருவருக்கும் கட்சி மேலிடத்தில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. மாநில அளவில், கட்சியில் தனித்தனி ஆதரவாளர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளனர்.
இன்று கூட்டம்
இந்நிலையில், முக்கிய தலைவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார்.இன்று மாலை 5:30 மணிக்கு பெங்களூரில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி, முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
அதன்பின், டில்லியில், கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அதிகாரபூர்வமாக முதல்வர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.முதல்வரை தேர்வு செய்து அறிவிப்பது, காங்கிரஸ் தேசிய தலைவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் இன்று இரவுக்குள் விடை கிடைத்து விடும்.
மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டரில்' குறிப்பிடுகையில், 'கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.'கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தொண்டர்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். இனி, வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்' என தெரிவித்துள்ளார்.
ராகுல் நன்றி
புதுடில்லியில், முன்னாள் எம்.பி., ராகுல் அளித்த பேட்டியில், ''கர்நாடகாவில் வெறுப்பு சந்தை மூடப்பட்டு விட்டது. தேர்தலில், அன்புடனும் சகோதரத்துவத்துடனும் இதயங்களை வென்றுள்ளோம். கர்நாடக மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்.''கொடூரமான முதலாளிகளை ஏழைகள் தோற்கடித்துள்ளனர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.