சாத்துார்: சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் என். சுப்பையாபுரம் ஊராட்சியில் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிய ஊருணியை தூர்வார வேண்டுமென கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
என். சுப்பையாபுரம் ஊராட்சி ஊருணி கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இது பல லட்ச ரூபாய் செலவில் 2020--21ல் புனரமைக்கப்பட்டது. ஊருணியை சுற்றி தடுப்புச்சுவரும், தண்ணீர் எடுக்க படித்துறையும் கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஊருணி அருகில் மணல் ஏற்றி வந்த லாரிகள் சென்றதால் சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் படிக்கட்டுகளும் சேதமடைந்தது. இதனால் பல லட்சம் மதிப்பில் நடந்த புனரமைப்பு பணிகள் வீணாகிவிட்டது. தற்போது பக்கவாட்டு சுவர்கள் இடிந்து படிக்கட்டுகள் உடைந்தும் காணப்படுகின்றன.
மேலும் நீர் வரும் ஓடை முழுவதும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. முள்செடிகள் முளைத்து புதர் மண்டிய நிலையில் உள்ளதால் பெரிய மழை பெய்தாலும் சிறிய அளவு மழை நீர் கூட ஊருணிக்கு வருவதில்லை.
மழைநீர் ஊரணிக்கு வராதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஊருணி அருகில் கிணற்று தண்ணீரும் பல நூறு அடி ஆழத்திற்கு சென்று விட்டது.
சுற்றுச்சுவர் இடிந்தும் புதர் மண்டியும் காணப்படும் ஊருணியை தூர் வாரவும் இடிந்து போன படிக்கட்டுகள், சுற்றுச்சுவர் கட்டவும் கட்டவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.