நரிக்குடி: அழகாபுரியில் சுகாதார வளாகம் பல லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனால் திறந்த வெளியை கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நரிக்குடி அழகாபுரியில் திறந்தவெளியை மக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு முன் ரூ. பல லட்சங்கள் செலவு செய்து சுகாதார வளாகம் கட்டப்பட்டது. மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கதவுகள், கட்டடங்கள் சேதம் அடைந்தன.
மராமத்து செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், சில காரணங்களால் சுகாதார வளாகம் செயல்பாடு இன்றி போனது. பல லட்சங்கள் செலவு செய்தும் பயன்பாடு இன்றி போனதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டது.
மக்கள் மீண்டும் திறந்தவெளியை நாட துவங்கினர். இதனால் தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார வளாகத்தை செயல்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.