கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி அவென்யூவில், காந்தி பூங்கா உள்ளது. நான்காவது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த தங்கராசு உள்ளார்.
காந்தி பூங்கா அருகில் நகராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது.
அந்த கிணற்றிலிருந்து குடிநீரை, தெருவின் வழியாக பள்ளம் தோண்டி, 'பைப் லைன்' அமைத்து, முதலாவது மற்றும் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு, வினியோகம் செய்வதற்கான பணிகள் நேற்று நடந்தன.
இப்பணிகள் நடைபெறுவது தொடர்பாக, கவுன்சிலர் தங்கராசுவிற்கு தகவல் தெரிவிக்காமல், நகராட்சி நிர்வாகம் கையாண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மற்ற அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களுக்கு இது தொடர்பாக தங்கராசு தகவல் தெரிவித்தார்.
'இங்கு நடைபெறும் பணிகள் குறித்து, வார்டு உறுப்பினரான எனக்கு, எந்த விதமான தகவலும் தெரிவிக்கவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமல் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் செயல்படுகிறார்' என, தங்கராசு குற்றம் சாட்டினார்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் உள்ள 30 வார்டுகளில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, எட்டு பேர் கவுன்சிலராக உள்ளனர். அதில் ஆறு பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள், நகராட்சி அலுவலகம் சென்று ஆணையரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.
அதற்கு நகராட்சி ஆணையர் இளம்பரிதி தெரிவித்ததாவது:
குடிநீர் பிரச்னையை தீர்ப்பதில் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகராட்சி கிணற்றில் இருந்து, குடிநீர் 'பைப் லைன்' அமைத்து அங்கிருந்து, முதலாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை முடித்துவிட்டு தெரிவிக்கலாம் என இருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டி 'பைப் லைன்' அமைப்பதால், அங்குள்ள வீடுகளில் கழிவு நீர் வெளியேறுவதிலும் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.