விருதுநகர்: விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகே குடிநீர் தொட்டி வளாகத்தின் உள்ளே ஒரு லாரியும் வெளியே டிராக்டர், லோடு ஆட்டோ, தண்ணீர் வழங்கும் வாகனம் என 5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளன. இவை ஆண்டுக் கணக்கில் முடங்கி கிடப்பதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.
விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், குடிநீர் வினியோகம் செய்ய சில ஆண்டுகளுக்கு முன் லாரிகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டன.
பல ஆண்டுகளாக செயல்பட்ட ஒரு சில வாகனங்கள், தற்போது செயல்படாமல் பழுதடைந்துள்ளன. அவை, ஓரம் கட்டப்பட்டு, திறந்த வெளியில் வெயில், மழையில் பாதித்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதே நிலை இன்னும் நீடித்தால், பல லட்சம் ரூபாய் வீணாகும் நிலை உள்ளது.
ஓரங்கட்டப்பட்ட லாரி, டிராக்டர் ஆட்டோ உள்ளிட்ட பழுதடைந்துள்ள வாகனங்களை உடனடியாக பொது ஏலம் விட்டு விற்பனை செய்து, அதன்வாயிலாக வரும் வருமானத்தை, நகரின் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்த வேண்டும்.
இதுகுறித்து, சமூகஆர்வலர் சிவசங்கரன் கூறியதாவது:
விருதுநகர் கல்லூரி சாலை குடிநீர் தொட்டி அருகே வரிசைகட்டி ஆண்டுக் கணக்கில் குடிநீர் வழங்கும் லாரி, பறக்கும் படை ஆட்டோ, டிராக்டர் என 5 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே பயன்படாத சேதம் அடைந்துள்ள வாகனங்களை பொது ஏலம் விட்டு அந்த வருவாயை நகரின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.