சென்னை, வடபழநி ஏ.வி.எம்., ஸ்டுடியோவில், படப்பிடிப்பு தளத்தின் ஒரு பகுதியை அருங்காட்சியகமாக மாற்றி, 'ஏ.வி.எம்., ஹெரிடேஜ் மியூசியம்' அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கால பெருமையை காட்டும் இந்த மியூசியத்திற்கு, பார்வையாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
மியூசியத்தின் பொறுப்பாளரான எம்.எஸ்.குகன், நமது நிருபரிடம் கூறியதாவது:
கடந்த, 1945ல் துவக்கப்பட்ட ஏ.வி.எம்., நிறுவனம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்கம் என, பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தில் இருந்து, சிவாஜி, ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வைஜெயந்திமாலா, கமல் உள்ளிட்ட பலர் திரையுலகிற்கு அறிமுகம் ஆகினர்.
தவிர, முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
கடந்த, 77 ஆண்டுகளில் 178 படங்களை தயாரித்துள்ளோம். ஏ.வி.எம்., தயாரித்த படங்களில் இடம்பெற்ற கார்கள், 'வீடியோ' கேமராக்கள், 'ஆடியோ' சாதனங்கள், திரைப்பட தயாரிப்புக்கு பயன்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளோம்.
கடந்த, 1910ல் இருந்து 2000 வரையிலான பழமையும், அழகும் வாய்ந்த, 45 விதமான கார்கள், 20 விதமான பைக்குகள் உள்ளன.
குறிப்பாக, 1886ம் ஆண்டின் தயாரிப்பான 'பென்ஸ் பேடண்ட்' மோட்டார் வாகனம், உள் எரிப்பு இயந்திரத்தால் இயக்கப்படும் உலகின் முதல் 'ஆட்டோமொபைல்', 1896ம் ஆண்டில் ஹென்றி போர்டின் முதல் சோதனை ஆட்டோமொபைலான 'போர்டு குவாட்ரி' சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.
செவ்வாய் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், மியூசியத்திற்கு விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மியூசியத்தை பார்வையிடலாம். நுழைவு கட்டணம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- - நமது நிருபர் -