பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் வனப்பகுதியில் அரிசி கொம்பன் யானை நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
இந்த யானை கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில் விட்டனர். இந்த யானை மேகமலை வனப்பகுதியில் திரிவதாக வனத்துறையினர் சந்தேகித்தனர். தற்போது புலிகள் காப்பகமான சாப்டூர் வனப்பகுதியில் இந்த யானை இருக்கிறதா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வன ரேஞ்சர் செல்லமணி கூறியதாவது: அரிசிகொம்பன் யானை இப்பகுதியில் உள்ளதா என கண்காணிக்க வேட்டைதடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 25 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாப்டூர் வனப்பகுதி மள்ளபுரம், அய்யன்கோவில், கோட்டமலை பகுதிகளில் கண்காணிப்பு நடக்கிறது. மக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள ஓடை, உடைப்புகளில் குளிக்க கூடாது. யானை நடமாட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும், என்றார்.