தமிழகம் வருகிறார் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த மாதம் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக அவர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.,வுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக்க, பல கட்சிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துவார் என்கின்றனர். பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சி தலைவர்களுடன் அமித் ஷா பேசுவார் என புதுடில்லி தலைவர்கள் சொல்கின்றனர்.
அவர் வரும் சமயத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி தான் தலைவர் என அமித் ஷா தெரிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து, தி.மு.க.,வின் ஊழல், அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க., 'பைல்ஸ்' அமைச்சர் தியாகராஜனின் 'ஆடியோ' ஆகிய விஷயங்களில் தி.மு.க.,வை எப்படி சிக்க வைப்பது என்பது குறித்தும் பழனிசாமி மற்றும் அண்ணாமலையிடம் அமித் ஷா பேசுவாராம்.
தென் மாநிலங்களில் அதிக கவனம்
அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தங்கள் புதுடில்லியில் துவங்கிவிட்டன. பா.ஜ.,வை பொறுத்தவரை தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மீது அதிக கவனம் செலுத்த, கட்சியின் தலைவர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.
'பிரதமர் மோடி இதுவரை பேசிய வற்றிலிருந்து 1,000 'வீடியோ'க்களை தேர்ந்தெடுக்க வேண்டும்' என, கட்சியின் பிரசார குழுவிற்கு நட்டா கட்டளையிட்டுள்ளார்.
இந்த வீடியோக்களில் முக்கியமான சில தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த பிரசார வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட உள்ளன.
புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தமிழ் பிரசார வீடியோவிற்கென ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு, தமிழ் மற்றும் தமிழகம் குறித்து இதுவரை மோடி பேசிய வீடியோக்களை தேர்ந்தெடுக்கும்.
ஓம் பிர்லாவின் தமிழ் பாசம்
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு தமிழ் மற்றும் தமிழகம் மீது அதிக பாசம். இவர் தமிழக எம்.பி.,க்களுடன் அதிகமாக பேசுவார். சமீபத்தில் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக இவர் எடுத்த முடிவு மிகவும் பாராட்டப்படுகிறது.
பார்லிமென்டில் பெரிய நுாலகம் உள்ளது. இங்கு, நாட்டின் அனைத்து மொழிகளிலும் உள்ள பழைய அரிய புத்தகங்கள் இங்கு உள்ளன.
பார்லிமென்ட் நுாலகத்தில் உள்ள திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், அகநானுாறு, புறநானுாறு என தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் 'டிஜிட்டல்' புத்தகங்களாக மாற்ற வேண்டும் என ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தமிழில் உள்ள 240 புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பார்லிமென்ட் நுாலகத்தில் கிடைக்கும். இது, தமிழக எம்.பி.,க்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முயற்சியின் வாயிலாக இலக்கியம் வளரும் என்கிறாராம் சபாநாயகர் ஓம் பிர்லா.