திருப்பூர்:காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்களை அகோரிகள் ஆசி செய்யும் 'போட்டோ' வெளியாகி வைரலாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலகத்துக்கு அகோரிகள் இருவரை அழைத்து வந்து, கமிஷனர், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான 'போட்டோ' சமூக வலைதளங்களில் வெளியானது.
கடந்த மாதம், 13ம் தேதி காசியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற இரு அகோரிகளை, 2வது வார்டு பா.ஜ., பொறுப்பாளர் அசோக், 2வது வார்டு தி.மு.க., பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் காங்கயம் நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகள் நிர்வாண கோலத்தில் வந்ததை பார்த்து, அங்கிருந்த பெண் பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, அங்கு கமிஷனர் வெங்கடேசன், கார் டிரைவர், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அகோரிகளிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
அதன்பின், அகோரிகள் கிளம்பி சென்றனர். கடந்த மாதம் எடுக்கப்பட்ட 'போட்டோ' தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகோரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சென்ற விவகாரத்தில், கட்சியினர் பூஜைக்காக அகோரிகளை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கேட்க, நகராட்சி கமிஷனர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, அவர் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷிடம் கேட்டதற்கு, ''அகோரிகள் அலுவலகத்துக்கு வந்து ஆசீர்வாதம் செய்து சென்றனர். ஆனால், பூஜை எதுவும் நடக்கவில்லை. அன்றைய தினம் நான் வெளியே இருந்தேன். முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு தொடர்பாக, கமிஷனர், தனியார் 'டிவி' நிருபர் ஒருவர் உடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, தற்போது, பூஜை நடந்ததாக தவறானதகவல் பரப்பப்பட்டு வருகிறது,'' என்றார்.