கடந்த காலங்களில் முதல்வர் ரங்கசாமி, திலாஸ்பேட்டையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைக்கு காலையிலும், மாலையிலும் சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடிப்பது வழக்கம்.
அப்போது, டீக்கடைக்கு வருகின்ற சாமான்ய மக்களிடம் சகஜமாக பேசி பழகுவார். இதன் மூலம், எளிமையான அரசியல்வாதி என்ற பெயர் கிடைத்ததுடன், தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை நேரடியாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
இதன் எதிரொலியாக, தட்டாஞ்சாவடி தொகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்கிறார். தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று சாதித்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி பாணியில், சபாநாயகர் செல்வமும் காட்சிக்கு எளியவராக பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
ரெட்டியார்பாளையத்தில் குடியிருந்த சபாநாயகர் செல்வம், சில மாதங்களுக்கு முன், தனது தொகுதியான மணவெளியில் உள்ள தவளக்குப்பத்தில் குடியேறினார்.
தவளக்குப்பத்தில் உள்ள டீ கடைக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சபாநாயகர் செல்வம் செல்கிறார். அங்கு டீ குடித்தவாறு அனைவருடனும் சகஜமாக பேசுகிறார். இது, மணவெளி தொகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
'டீ கடை பாலிடிக்ஸ்' பிரபலமாகி வருவதால், சபாநாயகரை சந்திப்பதற்காக டீ கடைக்கு வருவதை தொகுதி மக்கள் பலர் வழக்கமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.