விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய மது விலக்கு வேட்டையில் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை தடுக்கும் பொருட்டு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், மாநிலம் முழுதும் கஞ்சா, மது பாட்டில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் முழுதும் நேற்று நடந்த மதுவிலக்கு வேட்டையில் 49 பேர் கைது செய்யப்பட்டனர். காலை தொடங்கிய அதிரடி மதுவிலக்கு வேட்டையில், சாராய ஊறல்கள் மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 35 லிட்டர் சாராயமும், 65 லிட்டர் புதுச்சேரி சாராயமும், சாராய ஊறல் 60 லிட்டர் மற்றும் 400 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், நேற்று ஒரே நாளில் நடந்த சோதனையில் 11 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 430 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கடந்த 1ம் தேதி முதல் நடந்து வரும் கஞ்சா வேட்டையில், நேற்று வரை மாவட்டம் முழுதும் 50 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.