குன்னுார் வந்த சுற்றுலா வேன் மீது மின்கம்பி உரசியதில், 'ஷாக்' அடித்து ஒருவர் பலியானார்; இருவர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 'ஈரோடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரியில், 1999ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் மலரும் நினைவுகளை கொண்டாட ஒன்று சேர்ந்து, நீலகிரிக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று ஈரோடு மாவட்டத்திலிருந்து நண்பர்கள், 12 பேர் வேனில் குன்னுார் வந்தனர். 'ஐபீல்டு' அருகே காட்டேஜில் வாகனத்தை 'ரிவர்ஸ்' எடுத்துள்ளனர்.
அப்போது, வாகனம் மின் கம்பியில் உரசியதில் திடீரென 'ஷாக்' அடித்து, டிராவல்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு,42, சம்பவ இடத்தில் பலியானார். கார்த்திகேயன்,43, சீனிவாசன், 43, ஆகியோர் காயங்களுடன், குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்பர் குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில்,' இங்குள்ள சிறிய வழியில் வேன் சென்றுள்ளது. அப்போது மின்கம்பத்தில் மோதியுள்ளது. தொடர்ந்து 'ரிவர்ஸ்' எடுத்த போது மின்கம்பி வாகனத்தில் உரசியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது,' என்றனர்.