பி.ஏ.பி., திட்டத்தில், பாசன நிலங்கள் அடிப்படையில், பாகுபாடில்லாமல் சமச்சீரான முறையில் நீர் வினியோகம் செய்ய வேண்டும், என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசனத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், உடுமலை கால்வாய் பாசனத்திலுள்ள நிலங்களுக்கு ஏற்ப, நீர் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை,என தாசர்பட்டியை சேர்ந்த, விவசாயி வெங்கடாசலம், கடந்த, 2012ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சுப்ரமணியம், தீர்ப்புவழங்கியுள்ளார்.
அதில், 'பி.ஏ.பி., பிரதான கால்வாய் மற்றும் உடுமலை கால்வாய் பாசனத்திலுள்ள நிலங்கள் அடிப்படையில், பாகுபாடு இல்லாமல், சமச்சீரான நீர் வினியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சட்ட விதிமீறல்கள் இருந்தால், விவசாயிகள் நீர்வளத்துறை தலைமைப்பொறியாளரிடம் புகார் தெரிவிக்கலாம். முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார்.