ஆரோவில் விசிட்டர் சென்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரெஞ்ச் சிற்பி சார்லஸ் ஜனானின் சிற்பங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வெனிஸ் வம்சாவளியான பிரெஞ்ச் சிற்பி சார்லஸ் ஜனான், காண்பவர்களை கவரும் வகையில் கிரைனைட் கற்களில் 'மாடர்ன் ஆர்ட்' போல பல்வேறுஅழகிய வடிவங்களை சிலைகளாக வடித்து வருகிறார். இவரது படைப்புகள் 'பாரிஸ் கிராண்ட் பலாய்ஸ்' போன்ற மதிப்புமிக்க இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் வசித்து வரும் சார்லஸ் ஜனான், ஆரோவில்லில் அமைத்துள்ள கிரானைட் கற்கள் சிற்ப பட்டறையில் தான் வடித்த சிற்பங்களை ஆரோவில் தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைத்தார்.
தொடர்ந்து, ஆரோவில் விசிட்டர் சென்டர் வளாகத்தில் உள்ள புல்வெளியில், சார்லஸ் ஜனான் வடித்துள்ள சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை, ஆரோவில்லுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், சிற்பம் முன் நின்று ஏராளமானோர் 'செல்பி' எடுத்து கொள்கின்றனர்.