சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், 40வது ஆண்டாக நடப்பாண்டு அக்னி நட்சத்திர விழா, கடந்த, 11ம் தேதி தொடங்கியது.
இதை தொடர்ந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி,காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை, 6:00 மணிக்கு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சென்னிமலை மலை கோவிலை, 16 கி.மீ., சுற்றி கிரிவலம் வந்தனர். இரவில் மலை மீதுள்ள முருகன் கோவிலை அடைந்தனர்.
முன்னதாக காலை, 9:00 மணிக்கு மலை மீதுள்ள முருகன் கோவிலில், கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம், 1,008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் இன்று காலை, 7:00 மணி முதல் நடைபெறுகிறது. மதியம், 12:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை, உற்சவ மூர்த்தி புறப்பாடு நடக்கிறது.