எருமப்பட்டி: சிறுகுறு விவசாயிகளுக்கு, இடுபொருட்கள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை மூலம் மனிய விலையிலும், இலவசமாகவும் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், கடப்பாரை, தார்பாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசு மூலம், ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகள், விவசாய பொருட்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியிருந்தும், 5 சதவீத விவசாயிகளுக்கு கூட, இடு பொருட்களை வழங்காமல் அதிகாரிகள் விவசாயிகளை பாரபட்சம் காட்டி ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:
வேளாண்மை துறை அலுவலகத்தில் கடந்த, 3 மாதத்திற்கு முன் மருந்து தெளிக்கும் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்பத்தை வாங்கிய அதிகாரிகள் வந்ததும் அழைக்கிறோம் என, அனுப்பி வைத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் வாங்கி கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும், வேளாண் இடு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.