பல்லடம்: பல்லடம் அருகே, மின்கம்பம் பெயர்ந்து விழுந்ததில் வியாபாரி ஒருவரின் மண்டை உடைந்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்சாமி 48. மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று(மே 13) , இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின் கம்பம் பெயர்ந்து விழுந்ததில், பெருமாள் சாமியின் மண்டை உடைந்தது.
இது குறித்து அவர் கூறுகையில், ' வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளதாக ஏற்கனவே மின் வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்தோம். நீங்கள் எதற்காக மின்கம்பத்தின் அருகே செல்கிறீர்கள் என மின்வாரிய அதிகாரிகள் எங்களுக்கு அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் இரவு, நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது, திடீரென, பெயர்ந்து விழுந்த மின் கம்பத்தின் பாகங்கள் தலையில் விழுந்ததில் மண்டை உடைந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் ஏழு தையல்கள் போடப்பட்டன. மேலும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவானது. சேதமடைந்த மின்கம்பத்தை முன்னரே மாற்றி இருந்தால், தேவையற்ற செலவு ஏற்படாமலும், மண்டை உடைபடாமலும் இருந்திருக்கும் என்றார்.
மின் கம்பம் பெயர்ந்து விழுந்ததை தொடர்ந்து, மீதமுள்ள பாகங்கள் எப்போதும் விழலாம் என்ற நிலையில் ஊசலாடி வருகின்றன. அடுத்த விபத்து ஏற்படும் முன், மின்கம்பத்தை மாற்ற வேண்டியது அவசியம்