புழல்: புழல் அடுத்த காவாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவாஸ், 45; அம்பத்துார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்.
இவர், 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வரும் புத்தகரத்தைச் சேர்ந்த சதீஷ், 43, என்பவர் மூலம், அந்த பகுதியில் வீடு வாங்கினார்.
இதன் பத்திரப்பதிவு மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கலில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவாங்கரையைச் சேர்ந்த தன் நண்பர்களான கறுப்பு ஜெகன், 29, வெள்ளை சரவணன், 35, திலீப், 37, ரூபன், 38, ஆகியோருடன் ஸ்ரீவாஸ், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார்.
அப்போது, வீடு வாங்கியதில், தனக்கும், சதீஷுக்கும் ஏற்பட்ட பிரச்னை குறித்து கூறி, அவரை மிரட்ட வேண்டும் எனக் கூறியிருக்கிறார். பின், அனைவரும் புத்தகரம் அணுகுசாலைக்கு சென்று காத்திருந்து, அந்த வழியாக வீட்டிற்கு சென்ற சதீஷை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
பலத்த காயமடைந்த சதீஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த புழல் போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் உட்பட அனைவரையும், நேற்று காலை கைது செய்தனர்.