திருத்தணி: திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான தீமிதி விழா, கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும்காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,மதியம் மஹாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், பீமன், துரியோதனனை வதம் செய்தார்.
தொடர்ந்து, மேல்திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்திற்கு வந்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.
இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று நண்பகல் 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
தீமிதி திருவிழா
திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
இந்நிலையில், 25ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் தேதி சிறப்பு அபிஷேகம், அர்ஜுனன் தபசுவும், நேற்று காலை படுகளமும் நடந்தன.
இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டிய 550 பக்தர்கள், தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஆற்காடு குப்பம் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
குத்துவிளக்கு பூஜை
திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று இரவு 7:30 மணிக்கு, குத்துவிளக்கு பூஜை நடந்தது.
இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
தொடர்ந்து, உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, திருத்தணி நகரம் முழுதும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரும் 21ம் தேதி, துரியோதனன் படுகளம், தீமிதி விழாவும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவடைகிறது.