திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்களாம்பிகை உடனுறை நெல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில், சிறிய குடிசையில் இருந்தது. பிரதோஷம் உட்பட விசேஷ நாட்களில், அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு செல்வர்.
குடிசையை அகற்றி, புதிதாக கோவில் கட்ட, கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கிராம மக்கள் ஒத்துழைப்புடன் மூலவர், அம்பாள், பைரவர், துர்கை, நந்தி மண்டபம், நவகிரகங்கள் என, தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தும் பணிகள் முடிக்கப்பட்டன.
பின், மார்ச் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, தினமும் காலை 8:00 மணிக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. 48வது நாளான நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு, 108 சங்கு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடந்தன.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீப ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.