காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த பருவமழையின் போது நிரம்பியது. பின் அப்பகுதியில் விவசாயப் பணி துவங்கியது. கடந்த மாதம் நெற்பயிர் அறுவடை முடிந்தது.
ஆனால் ஏரியில் இன்னும் ஒரு போகத்திற்கு தண்ணீர் உள்ளது. அதற்குள் மீன் பிடிப்பதற்காக, ஏரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு பருவ மழைக்கு ஏரி நிரம்பியதால் ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் வைத்தனர். கடந்த மாதம் அறுவடை முடிந்தது.
இன்னும் ஒரு போகத்திற்கு தண்ணீர் இருக்கிறது. அதற்குள் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.
இதனால், அடுத்த போகம் விவசாயம் செய்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் பலர் விவசாயம் செய்ய வில்லை. கோடை காலத்தில் ஏரி வறண்டு விடும் அப்போது மீன் ஏலம் எடுத்தவர்கள் மீன் பிடிப்பர். ஆனால் ஏரியில் பாதிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் மீன் பிடிப்பதற்காக தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது கவலையாக இருக்கிறது.
ஏரி தண்ணீர் வற்றியதும் மீன் பிடித்தால் யாரும் கேட்க மாட்டார்கள். இது பொது பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நான் புதிதாக பணிக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. மீன் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விட நான் அனுமதி கொடுக்க வில்லை' என்றார்.