பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான ஆளுமை வளர்ச்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
பாலமந்திர் 2023 என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தா பண்பாடு மற்றும் பாரம்பரிய மையத்தின் சார்பில்,10 நாள் ஆளுமை வளர்ச்சி முகாம் நடந்தது. கோவையில் உள்ள, 15 பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், பஜனை, தேச பக்தி பாடல்கள், சிவபுராணம், விஷ்ணு சகஸ்ரநாமம், இந்திய கலாசாரம், கோவில் மற்றும் வழிபாட்டு முறைகள், தேச தெய்வீக சின்னங்கள், நினைவுத்திறன் சோதனை, பெற்றோர் மற்றும் பெரியோர்களை கவனித்துக் கொள்ளுதல், இந்திய புராணங்களின் மதிப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பகுப்பாய்வு சிந்தனை, குழந்தைகளுக்கான சுவாமிஜியின் செய்திகள், வாழ்க்கைத் திறன், ஊக்கமளிக்கும் தலைவர்கள், படைப்பாற்றல் சிந்தனை உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முகாமில், சுவாமி புத்திதானந்தா தத்பாஷானந்தா, நாராயணானந்தா, உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
நிறைவு விழாவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர் தங்கமணி செய்திருந்தார்.