சென்னை: காவலர் குழந்தைகள் காப்பகத்தின் பராமரிப்பு கட்டணம், 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவல் துறையில், கணவன், மனைவி இருவரும் பணிபுரிவதால், குழந்தையை வீட்டில் தனியாக விட்டு வர முடியாத சூழல் உள்ளது. கணவனோ, மனைவியோ, ஒருவர் காவலராகவும், மற்றொருவர் தனியார் துறையிலும் பணிபுரிந்தாலும், குழந்தை பராமரிப்பில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால், மாநிலம் மற்றும் மாவட்டத்தின் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட காவலர் குழந்தைகள்காப்பகம் செயல்படுத்தப்படுகின்றன.
தினமும் காலை, 9:00ல் இருந்து இரவு, 7:00 மணி வரை திறந்து இருக்கும். இது மழலையர் பள்ளியாகவும் செயல்படும். குழந்தைகளை பராமரிக்கவும், பாடங்களை கற்பிக்கவும், பெண் காவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும் பணியில் உள்ளனர். குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் என, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பு கட்டணமாக, தினமும் போலீசார், 10 ரூபாய் செலுத்த வேண்டும்; அரசு, 30 ரூபாய் கொடுக்கும்.
தற்போது, இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. போலீசார், 20; அரசு, 40 ரூபாயும் வழங்க உள்ளது. இதனால் பராமரிப்பு கட்டணம், 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'தேவையான இடங்களில், மேலும் பல காவலர் குழந்தைகள்காப்பகத்தை ஏற்படுத்த ஆய்வு செய்து வருகிறோம்'என்றனர்.