உடுமலை:உடுமலை நகரில் உள்ள பேக்கரி கடைகளில், உணவு பொருட்கள் தரமில்லாமல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை நகரில் வீதிக்கு வீதி பேக்கரி கடைகளும், சிற்றுண்டி உணவகங்களும் உள்ளன. நாள்தோறும் இந்த கடைகளில் கூட்டம் குறையாமல் காணப்படுகிறது.
ஆனால், இதில் பெரும்பான்மையான கடைகளில் தரமில்லாத இனிப்புகள், பானங்கள், சிற்றுண்டிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
சில கடைகளில் இனிப்புகளை வாங்கி சாப்பிட்டால், உடல்நலம் சரியில்லாமல் போகிறது. எண்ணெய் பழையதாக பயன்படுத்துவது அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எசென்ஸ்கள் பயன்படுத்துவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
சில பேக்கரிகளில் நீண்ட நாட்களாக கேக் வகைகளை வைத்துக்கொள்கின்றனர். புதிதாக கடைக்கு வருவோருக்கு எந்த விபரமும் தெரியாமல் வாங்கி உண்ணுகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பேக்கரிகளில் ஆய்வு நடத்த வேண்டும். தரமில்லாத திண்பண்டங்கள் விற்பனை செய்வதை தடுத்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.