உடுமலை:கோடை காலத்திலும், தரமான மல்பெரி இலைகளை உற்பத்தி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், பட்டுக்கூடு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், மாநிலத்திலேயே உடுமலை பகுதி முன்னிலையில் உள்ளது. தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு, தரமான மல்பெரி இலைகளே ஆதாரமாக அமைகிறது.
உடுமலை பகுதியில், இந்தாண்டு முன்னதாகவே துவங்கிய கோடை வெயில் காரணமாக, மல்பெரி செடிகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது. கோடை கால மழைக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
தற்போது, வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.தரமான மல்பெரி இலைகள் உற்பத்திக்கு, செடிகளுக்கு இடையில், மூடாக்கு அமைத்தல், மாலை நேரத்தில் நீர்ப்பாசனம் செய்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.