பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவியை பிடிப்பதில், காங்கிரசில் குடுமிப்பிடி சண்டை தொடர்கிறது. 35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், சித்தராமையா ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். தன் சமூகத்தின் மடாதிபதிகள் தயவை சிவகுமார் நாடியுள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு நடந்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் 135, பா.ஜ., 66, ம.ஜ.த., 19, மற்றவர்கள் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க தேவையான தனி பெரும்பான்மை பெற்றதால், காங்கிரஸ் அரியணையில் அமர உள்ளது. இந்நிலையில், முதல்வர் பதவிக்கு, மாநில தலைவர் சிவகுமார், 60, முன்னாள் முதல்வர் சித்தராமையா, 75, இடையே குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.
முதல்வரை தேர்வு செய்வதற்காக, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று மாலை நடக்கும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
நேற்று, 35க்கும் மேற்பட்ட தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சித்தராமையா ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டத்தில் தனக்கு ஆதரவாக பேசும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், சிவகுமார், தன் சமுதாயமான ஒக்கலிக மடாதிபதிகள் உதவியை நாடியுள்ளார். இதன்படி, பெங்களூரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில், ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், ஸ்பிகபுரி சமஸ்தான மடாதிபதி நஞ்சாவதுாத சுவாமிகள் ஆகியோர், 'சிவகுமார் தான் முதல்வராக வேண்டும். அவருக்கு வாய்ப்பு தர வேண்டும்' என்றுவலியுறுத்தினர்.
மற்றொரு புறம்குருபர்கள் சங்கத்தினர் ஆலோசித்து, 'சித்தராமையாவுக்கு தான் முதல்வர் பதவி தர வேண்டும்' என, வலியுறுத்தினர்.
இதே வேளையில், சிவகுமார் நேற்று பல்வேறு கோவில்களுக்கு சென்றும் வேண்டி வந்தார். தன்வீட்டிலும் சிறப்பு ஹோமங்கள் நடத்தினார்.
பார்வையாளர்கள் வருகை
முதல்வரை தேர்வு செய்வதற்காக, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே, காங்., தேசிய பொதுச் செயலர் ஜிதேந்திர சிங், முன்னாள் பொதுச் செயலர் தீபக் பபாரியா ஆகியோரை மேலிட பார்வையாளர்களாக, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
முன்னதாக, கார்கே நேற்று காலையே புதுடில்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு பெங்களூரின் நட்சத்திர ஹோட்டலில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மாலை 5:53 மணிக்கு மேலிட பார்வையாளர்களும்; 6:25 மணிக்கு சித்தராமையாவும் வந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் பின் ஒருவராகவந்தனர்.
மேலிட பொறுப்பாளர்கள் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பொதுச் செயலர் வேணுகோபால் வந்தனர். பலரும் காத்திருந்த நிலையில், இரவு 7:12 மணிக்கு தான் சிவகுமார் வந்தார். அதன்பின், இரவு 7:15 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.
தலைவர்களுக்கு பாராட்டு
ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற லதா, மேலுகோட்டில் வென்ற கர்நாடகசர்வோதயா கட்சியின் தர்ஷன் புட்டண்ணய்யா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதலில், கட்சி வெற்றிக்காக இரவு, பகலாக உழைத்த சித்தராமையா, சிவகுமார், கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சித்தராமையா, சிவகுமார் இருவருக்கும் சமமான ஆதரவு வெளிப்பட்டது. ஒருமித்த முடிவு எடுக்க முடியாத சூழலில், இறுதியில், முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை, கார்கேவிடம் ஒப்படைத்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு கூட்டம் முடிந்தது.
* தனி தனியாக கருத்து
கூட்டம் முடிந்து வெளியே வந்த மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''தேர்தலில் வெற்றி பெற்ற 135 பேரும், முதல்வர் யார் என்பதை கார்கே முடிவுக்கு விட ஒப்புக் கொண்டனர். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதன்பின், அதே ஹோட்டலில் அனைவருக்கும் இரவு விருந்து நடந்தது. விருந்து முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்களை மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக அழைத்து, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். சிலர் சித்தராமையாவுக்கும், இன்னும் சிலர் சிவகுமாருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவி குறித்து, நேற்றே முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சித்து, சிவகுமார் இடையேயான குடுமிப்பிடி சண்டையால், முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இன்று அல்லது நாளை சோனியா, ராகுலுடன் கார்கே ஆலோசித்து இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் நடந்த நட்சத்திர ஹோட்டல் எதிரில் சித்தராமையா ஆதரவாளர்கள், அவரது படத்தை வைத்து கொண்டு போராட்டம் நடத்தினர். சிறிது நேரத்தில் சிவகுமார் ஆதரவாளர்கள், அவரது படத்துடன் வந்து போராட்டம் நடத்தினர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பினர். ஒரு கூட்டத்தில் மோதல் ஏற்படுவது போன்று இருந்தது.உடனே போலீசார் வந்து, இரு தரப்பினரையும் வெளியேற்ற முற்பட்டனர். அப்போது, சிவகுமார் ஆதரவாளர்கள், போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.