போடி, -போடி அருகே ராசிங்கபுரம் மந்தை ஓடை தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் முட்செடிகள் ஆக்கிரமிப்பு, குப்பை தேக்கத்தால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
போடி ஒன்றியம் ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்துப்பட்டி. இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மந்தை ஓடை உள்ளது. இந்த ஓடை பல ஆண்டுகளாக தூர்வரப்படாத நிலையில் முட்புதர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மழைநீர் சீராக செல்ல முடியாத நிலையில் சுற்று பகுதியில் இருந்து வரும் வீணாகும் கழிவுநீர், கொட்டப்படும் குப்பை சேர்ந்து ஓடை தேக்கமாகி விடுகிறது.
அருகே குடியிருப்புகள் மட்டும் இன்றி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது.
ஓடைப் பகுதியில் தேக்கமான குப்பை, கழிவு நீரால் குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். ஓடை பகுதியை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, மழைநீர் சீராக செல்லும் வகையில் மந்தை ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.