பெங்களூரு,-சட்டசபை தேர்தலில், தோல்வியடைந்ததை தொடர்ந்து, பா.ஜ., தேசிய முதன்மை செயலர் ரவி, தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட ரவி, தோல்வி அடைந்துள்ளார். தோல்வியால், பா.ஜ., தொண்டர்களும், ஆதரவாளர்களும் மனம் நொந்துள்ளனர்.
இவர்களுக்கு ரவி எழுதியுள்ள கடிதம்:
கடந்த 20 ஆண்டுகளாக, என்னை தேர்வு செய்த சிக்கமகளூரு மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இதை சமமாக ஏற்றுள்ளேன்.
தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனம் தளராமல், கட்சியை மீண்டும் பலப்படுத்தலாம். வெற்றி, தோல்வி இயல்பானது. இது சிந்தாந்த தோல்வியல்ல. இதை என் தனிப்பட்ட தோல்வியாக கருதுகிறேன். நடந்த தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறேன்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு, என் வாழ்த்துகள். இதற்கு முன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சிக்கமகளூரு தொகுதியில், பல வளர்ச்சி பணிகளை செயல்படுத்தினேன்.
ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள். அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவேன். தொண்டர்கள் சக்தியை மீறி உழைத்தனர். கட்சி கொடுத்த பொறுப்புடன், தொகுதி பணிகளுக்கும் நேரம் ஒதுக்கினேன்.
தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனம் தளர வேண்டாம். அவர்களுக்கு முதுகெலும்பாக இருப்பேன். பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.