பொள்ளாச்சி அருகே, பனை மரத்தில் ஏறி மது அருந்தி துாங்கிய நபரை, போராடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆவல் சின்னாம்பாளையம் அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி பிரிவில் நேற்று ஒரு நபர், பனைமரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு மது குடித்து விட்டு துாங்கியுள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கோட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், மரத்தின் கீழே வலை விரித்து, கயிறு வாயிலாக இறக்க முற்பட்டனர். பின்னர், கயிறால் அவரை மீட்பது கடினம் என்பதால், கிரேன் உதவியுடன் மீட்க முயற்சித்தனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர், அந்த நபரை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
யார் இந்த நபர்?
போலீசார் கூறியதாவது: ஆனைமலை செமணாம்பதியை சேர்ந்தவர் லட்சுமணன்,45. விவசாய நிலங்களில் வேலை செய்து, கிடைக்கும் வருமானத்தில் மது அருந்தி ஆங்காங்கே தங்குவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணிக்கு வால்பாறை ரோடு ஆவல்சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி பிரிவு அருகே மது அருந்தியுள்ளார். திடீரென அவர், குவார்ட்டர் மதுபாட்டிலை இடுப்பில் வைத்துக்கொண்டு அங்கு இருந்த, 60 அடிக்கு மேல் உயரமான பனைமரத்தின் மீது ஏறி அமர்ந்தார். அங்கு மதுவை குடித்து விட்டு துாங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து, பாதுகாப்பாக தீயணைப்புத்துறை உதவியுடன் அவரை மீட்டோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல்வேகமாக பரவியதால், அதிகளவு மக்கள் திரண்டனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
போலீசார், போக்குவரத்தை சீர்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.