கல்லுாரியில் வேலை கேட்பது போல சென்று, மாணவ, மாணவியரின் மொபைல் போன்களை திருடிய நபரை சேலம் போலீசார் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியில் தனியார் கல்லுாரி உள்ளது. பிப்., 10ம் தேதி காலை முதல் மதியம் வரை, பி.எஸ்சி., மாணவர்கள், 25 பேர் வகுப்பறையில் மொபைல் போன் உள்ளிட்ட உடைமைகளை வைத்துவிட்டு ஆய்வகத்துக்கு சென்றனர்.
திரும்பி வந்தபோது, 20 மொபைல் போன்கள், 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. கல்லுாரி நிர்வாக புகார்படி அம்மாபேட்டை போலீசார் விசாரித்தனர்.
இது தொடர்பாக சேலம், கிச்சிப்பாளையம், அண்ணா தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், 40, என்பவரை, போலீசார் கைது செய்து, 20 போன்களையும் மீட்டனர்.
பி.டெக்., படித்துள்ள இவர், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில், கல்லுாரிகளில் வேலை தேடுவது போல சென்று, 80 மாணவ, மாணவியரின் மொபைல் போன்களை திருடியதாக கூறினார்.
இவர் மீது திருச்செங்கோடு, வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்களில், மொபைல் போன் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.