தாராபுரம்: தாராபுரம் அம்மா உணவக இட்லிகள், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவதாக கூறி, அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம், காய்கறி மார்க்கெட்டில் அம்மா உணவகம் இயங்குகிறது. இங்கு தினமும் காலையில் மக்களுக்கு வழங்கப்படும் இட்லிகள், விரைவில் தீர்ந்து விடுவதாக புகார் எழுந்தது. டாஸ்மாக் கடைகளுக்கு மறைமுகமாக வினியோகம் செய்வதே இதற்கு காரணம் என்று, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதை கண்டித்து அம்மா உணவகத்தை, அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன்
உள்பட, 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு தரவுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் கூறினர்.
குடும்ப தகராறில் பெண் விபரீத முடிவு
பவானி: அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பவானி அருகே அம்மாபேட்டை, செம்பாடம்பாளையத்தை சேர்ந்த சோலையம்மாள் மகள் செல்வி, 34; இவரின் கணவர் பழனிச்சாமி. தம்பதிக்கு, ௧௭ வயதில் மகன், ௧௩ வயதில் மகள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், செல்வி கோபித்துக் கொண்டு, அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த செல்வி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மகுடேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜை
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்தனர். மேலும்
அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.