குளித்தலை: தரகம்பட்டியில், ரூ.12.40 கோடி மதிப்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படுவதற்கான கட்டட பணிகளுக்கான பூமி பூஜை விழா நடந்தது.
குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா தரகம்பட்டியில், ரூ.12.40 கோடி மதிப்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படுவதற்கான கட்டட பணிகளை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
ஆர்.டி.ஓ.,புஷ்பாதேவி, கல்லுாரி முதல்வர் ஹேமாநளினி, தி.மு.க., ஒன்றிய செயலர் சுதாகர், கடவூர் தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,சிவகாமசுந்தரி பேசியதாவது: உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை வாயிலாக கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி, நிதி ஒப்பளிப்பு ஆணை வழங்கினர். 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு பேசினார்.
திருச்சி தொழில் நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் வரதராஜன், உதவி பொறியாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் நந்தினி, மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.