'முதல்வராக பதவி வகிப்பவர், இந்த அளவுக்கு வாஸ்துவுக்கு அடிமையாகி விட்டதை நினைத்தால், வருத்தமாக உள்ளது...' என, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவருமான, சந்திரசேகர ராவை நினைத்து கவலைப்படுகின்றனர், இந்த மாநில மக்கள்.
சந்திரசேகர ராவுக்கு ஜோதிடம், வாஸ்து போன்றவற்றில், அளவு கடந்த நம்பிக்கை உண்டு. கட்சி அல்லது அரசு சார்ந்த எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன், தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் கலந்தாலோசிப்பார்.
வீட்டிலிருந்து தலைமை செயலகத்துக்கு புறப்பட்டாலும், அதற்கும் நல்ல நேரம் பார்ப்பார். ஹைதராபாதில் உள்ள அவரதுவீடு, கட்சி அலுவலகம்ஆகியவை வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படியே அமைக்கப்பட்டு உள்ளன.
'உங்களுக்கு பிரதமராகும் ராசி உண்டு...' என, யாரோ ஒரு ஜோதிடர் ஆலோசனை கூறியதால், தன் கட்சியின் பெயரையே பாரத் ராஷ்ட்ர சமிதி என்று மாற்றினார்.
புதுடில்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தை சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தின் ஒவ்வொரு செங்கலும், வாஸ்துப்படி தான் அடுக்கப்பட்டன. நல்ல நேரத்தில், வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றார், சந்திரசேகர ராவ்.
'புதுடில்லி அலுவலகம் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டு உள்ளது. இனி நான் பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது...' என்று கூறி வருகிறார்.
தெலுங்கானா மக்களோ, 'சந்திரசேகர ராவின் கனவை நிறைவேற்ற, வாஸ்து கை கொடுக்குமா என பார்ப்போம்...' என, கிண்டலாக கூறுகின்றனர்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி:
கர்நாடகா சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான மனநிலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா என, பலரும் பிரசாரம் செய்தும் ஆட்சியை இழந்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததும், தேசிய பிரச்னைகளை முன்னிறுத்தியதுமே தோல்விக்கு காரணம். ஊழல் செய்தால், மாநில அரசுகள் ஆட்சியை இழக்க நேரிடும் என்பது, தமிழகத்துக்கு பெரிய எச்சரிக்கை.
கர்நாடகாவுல, இன்னைக்கு பா.ஜ.,வுக்கு நேர்ந்த கதி, நாளைக்கு தி.மு.க.,வுக்கும் நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றீங்க... புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி!