சென்னை: மூத்த குடிமக்கள், நோயாளிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என, அனைத்து தரப்பினரின், வெளியூர் பயணத்திற்கான முதல் தேர்வாக ரயில்கள் உள்ளன. ஆனால், பிரதான ரயில் நிலையங்களில் கூட, ஒரு மருந்தகம் இல்லை.
இதனால், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் அமைக்க வேண்டும் என்பது, ரயில் பயணியரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
அவசர கால உதவி
இதுகுறித்து, கடந்த நவ.,3ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், மருந்தகங்களுடன் கூடிய அவசர கால மருத்துவ உதவி மையங்கள் அமைக்க, ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலம் முடிவு
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களுக்கு வரும், பயணியருக்கு திடீரென காயம், மாரடைப்பு, மூச்சுத்திணறல் என ஏற்படும் பாதிப்புகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், ஏற்கனவே 'இலவச மருத்துவ உதவி மையம்' அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான, ஒப்பந்த காலம் முடிந்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், மருந்தகத்துடன் கூடிய அவசர கால மருத்துவ உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளோம்.
விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். அதுபோல், சென்ட்ரலில் ஆடைகள் அறை; தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 'பேட்டரி' கார்கள் வசதி, திருவள்ளூர், வேளச்சேரியில் கட்டண கழிப்பறை வசதிகளை கொண்டுவர, ஒப்பந்தம் வெளியிட்டு உள்ளோம்.
பணிகள் முடிந்து, ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.